என் வாழ்க்கை அதிகமாக அலுவலக உலகில் சஞ்சரித்து , பின்பு மறு வாழ்க்கையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நான் கற்ற பாடங்கள் பற்பல. இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து , சுயமாக சிந்தித்து , தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும். இதை பள்ளிக்கூடத்தில் நீங்கள் படிக்க முடியாது.
- நீங்கள் நன்றாக உழைத்தாலும், உயர்வு என்பது ஏணி மாதிரி. எற நினைப்பார்கள். பாதி தூரம் சென்றவுடன், கீழிருந்து யாராவது இழத்து விடுவார்கள்.இது தான் நண்டு வித்தை (Crab Technique). இதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்: நீங்கள் ஒரு பாத்திரத்தில் எத்தனை நண்டுகளை போட்டு, மூடாமல் தைரியமாக வைக்கலாம் . எந்த நண்டும் வெளியே போகாது. எந்த நண்டு மேலே ஏறினாலும், கீழே உள்ள நண்டு அதை பிடித்து இழுக்கும். இதை தான் நாம் கார்பரேட் உலகில் காண்பது.
- தாங்கள் என்னதான் இரவு பகலாக வேலை செய்தாலும் அதைத் தாங்கள் வெளிக்காட்டிக்கொள்ளா விட்டால் உங்கள் உழைப்பு வீணாகிப்போவது உறுதி. அவ்வப்போது உங்கள் உழைப்பை உங்கள் மேலாளர் கவனிக்கும்படி செய்துகொள்ளுங்கள்.இல்லையேல் எவருக்கு நன்றாக பேச தெரிகிறதோ அவர் அச்செயலின் பலனை எடுத்துக்கொள்வார்.
- உங்கள் அரிசியில் உங்கள் பெயர் உள்ளது என்பது போல உங்கள் வேலையை மட்டும் நீங்கள் செய்தல் உங்கள் பணி சிறப்பாக இருக்கும்.அடுத்தவர் வேலையை நீங்கள் செய்ய தொடங்கினால் அதை கடைசி வரை உங்கள் தலையில் மற்றவர் ஏற்றிவிட வாய்ப்பு உண்டு. என் அலுவலகத்தில் இதனாலயே என்னுடைய வேலை என்ன என்பது பலருக்கும் தெரிவதில்லை. நான் ஒரு ஆசிரியர் என்பதை அடிக்கடி அவர்களுக்கு நியாபகப்படுத்தும் இக்கட்டான நிலையில் இருக்கிறேன். எந்த வேலையை யாருக்கு சொல்வது என்பதில் அவர்களுக்கு இங்கிதம் இல்லையென்றாலும் நாம் தான் அதில் கவனமாக இருக்க வேண்டும்.
- நம் சுயமரியாதையை விற்று, மேலே உயரலாம். நீங்கள் சுயமரியாதை உள்ளவர்கள் என்றால் மிகவும் கடினம் தான்.
- எப்போதும் அலுவலகத்தில் அளவோடும் வாசிக்கவேண்டும். அதேநேரம் பேசப் பயந்து வாய் மூடியிருக்கும் ஊமைகள் கவனிக்கப் படுவதில்லை.
- நிறைய காலங்கள் ஒரே கம்பெனியில் கழிக்கக் கூடாது. அப்படி உழைக்க , வேலை பார்க்க வேண்டும் என்றால் , மேலே சொன்ன பாய்ன்ட் எண் 2ஐ பார்க்கவும்.
- நாம் நன்றாக உழைக்கும் போது, நிறைய சிங்கம், புலி, ஓநாய்களை சந்திக்க வேண்டும். இதில் மேலே சொன்ன பாய்ன்ட் எண் 1ஐ பார்க்கவும்.
- நல்ல பாஸ் கிடைத்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நான் அப்படி ஒருவரை தேடிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் வேலைபார்க்கும் கம்பெனியில் நல்ல பாஸ் கிடைக்கா விட்டால், வேறொரு கம்பெனியை தேடுங்கள்.
- உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (know yourself). இது தான் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம். நான் சொல்லும் இந்த விஷயம் சாதாரனமானது அல்ல. இதை வாசிப்பவர் அனைவரும் சற்றே சில நிமிடங்களையாவது இதில் கவனம் செலுத்தி இதன் தாத்பரியம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளவும். இதை விளங்காது, நீங்கள் என்ன முயற்சி எடுத்தாலும் அது வீணானது என்பதை புரிந்து கொள்ளவும். இதை தான் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார். இதை நாம் பள்ளி, கல்லூரியில் படிக்க முடியாது.
- உங்களை அறிவதன் மூலம் தான், உங்களுடைய மதிப்பு (worth) என்ன என்பது தெரியும். இதனை விளங்காவிட்டால், நாம் வாழ்க்கை முழுவதும் பணியாளர்களாகவே வேலை பார்த்து கடைசியில் ஓய்வும் பெறலாம். நீங்கள் அந்த 5% வெற்றியாளர்களின் பட்டியலில் வரவேண்டும் என்றால், எண் 9ஐ நன்றாக ஆழ்ந்து சிந்திக்கவும். இல்லை என்றால், அந்த 95% பட்டியலில் தான் வாழ்க்கையை கழிக்க முடியும்.
- துறை சார்ந்து தினமும் ஏதேனும் படிக்க வேண்டும்.உங்கள் திறன்களை (skills) நன்றாக வளர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்வின் எல்லை வரை மிகவும் உதவும். எப்போதுமே ஒரு தாகத்தோடு எதையாவது படித்துக்கொண்டே இருக்க இந்த புதிய டெக்னாலஜி டிமாண்ட் உதவுகிறது. இல்லையேல் காலம் முழுக்க ஒரே மாதிரி வேலை செய்து அலுத்து விடும். நல்ல தகவல் தொடர்புத் திறன், கருத்துப் பரிமாற்றத் திறன், பேச்சுத் திறன் இவை உங்களை முன்நிறுத்தும்.
- உங்கள் பிரச்சனைகளை கேட்க ஒருவருக்கும் நேரமில்லை. அவர்கள் பிரச்சனைகளை தீர்க்கவே நீங்கள் உள்ளீர்கள் என்பதை உணர்ந்து வேலையை சரியாக செய்ய வேண்டும்.கண்காணிக்க யாரும் இல்லை என்பது போல தெரியும், ஆனால் எல்லோரும் கண்கணிக்கப்படுவார்கள்.
- தன்னம்பிக்கை மிக அவசியம். என்ன சிக்கல் வந்தாலும் எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.
- காலையில் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும், அதே போல மாலையிலும் சரியான நேரத்திர்ற்கு கிளம்பிவிடவேண்டும். நாம் வீட்டிற்கு கிளம்பும் நேரம் பார்த்து நமக்கு வேலை சொல்லும் அரைக்கிறுக்கன்கள் எல்லா அலுவலகத்திலும் உண்டு. அவர்களை பார்த்தல் எனக்கு என்ன தோன்றும் தெரியுமா? வீட்டை முழுவதும் சுத்தம் செய்த பின் நாய் ஓடிவந்து அசிங்கம் செய்யுமே, அது போல.
- எங்கு வேலை செய்தாலும், என்ன வேலை செய்தாலும் உங்கள் வேலைய மட்டும் நேசியுங்கள், வேலை செய்யும் இடத்தை அளவுக்கு அதிகமாக நேசித்து மனமுடைந்து போகாதீர்கள்.
- உடல் நலனை பாதுகாக்க மாதம் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொண்டால் மட்டுமே நீங்கள் தொடர்ந்து நன்றாக உழைக்க முடியும். உங்கள் வாழ்வில் கடைசி வரை கூடவே வரப்போவது உங்கள் உடல் மட்டுமே.
- ஒரு முறை விடுமுறை அன்று அலுவலகம் வந்தால், எல்லா விடுமுறைக்கும் அலுவலகம் வரவைக்கபடுவார்கள். விடுமுறை நாட்களில் சம்பளம் கொடுத்தால் மட்டும் செல்வது தான் மரியாதை இல்லையேல் அவர்களுக்கு ஓசியில் வேலை வாங்கும் பழக்கத்தை நாமே கற்றுக்கொடுத்து விடுவோம். திறமையை மதிக்கும் நிர்வாகமென்றால், நீங்கள் நேரத்துக்கு வீடு திரும்ப முடியும்; விடுப்பு எடுக்க முடியும். அப்படியில்லாத நிர்வாகம் என்றால் நீங்கள் தன சரியான முறையை பின்பற்ற வேண்டும். முடிந்த வரை விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள்.
- உங்கள் வேலையை நம்பி கடன் வாங்கி வீடு கார் வாங்கக்கூடாது. சேமிக்க கற்று கொள்ள வேண்டும். சரியான திட்டமிடுதல், உங்கள் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும்.
- ஊதிய உயர்வு பற்றி நீங்கள் பேசாதவரை அது கிணற்றில் விழுந்து கல்லு மாதிரி தான். அவர்களாகவே அழைத்து சம்பள உயர்வு தரமாட்டார்கள். 3 மாசத்துக்கு ஒரு முறையாவது உப்புமா மாதிரி கிண்டிட்டே இருக்கணும். உங்கள் எஜமானர் ஒன்றும் நஷ்டத்திற்காக தொழில் செய்யவில்லை, உங்கள் உழைப்பிற்கு ஏற்ற சம்பளத்தை பேசி வாங்குவது உங்கள் கடமை. நீங்கள் எவ்வளவு வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு மிகைப்படுத்தி காட்டுகிறீர்கள் என்பது தான் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணை. இல்லையேல் கடைசி வரைக்கும் நீங்கள் அவருக்கு அடிமை.
- சரியான சம்பளம் கிடைக்கவில்லையென்றால் அந்த வேலையை விட்டு நின்றுவிடுவதே மிகசிறப்பு. அடுத்த வேலை கிடைக்க தாமதம் ஆனாலும் சரியான வேலையை தேர்ந்து எடுக்க நேரம் கிடைக்கும். உழைத்தால் உயரலாம், இருக்கும் அலுவலகத்தில் வாய்ப்பு இல்லையென்றால் வேறு கடையை பார்க்க வேண்டும். உங்களுக்கு சம்பளம் தான் தருகிறார்கள் தவிர உங்களை விலைக்கு வாங்கிவிட வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அதனால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல தயங்காதீர்கள்.
- அலுவலகத்தில் (gossip) என்கின்ற கிசுகிசுவை விட்டும் நீங்கள் விலகி இருங்கள். உங்களுடைய பாஸ் (boss) நிறைய ஒற்றர்களை நியமித்து இருப்பார். சில பேர் உங்களிடம் வந்து, நலினமாக பேச்சு கொடுத்து உங்களை உள் வாங்குவார். நீங்கள் யாரிடமும் உங்கள் சொந்த மற்றும் அலுவலக விஷயங்களில் நீங்கள் அனுபவிக்கின்ற எதிர்மறை (negative) மற்றும் பச்சாதாபங்களை என்றுமே பகிர்ந்து கொள்ளாதீர்கள். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று நமக்கு தெரியாது. கவனம் தேவை. நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. ஒருவரை வைத்து ஒருவர் சுயலாபம் சம்பாதிப்பதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.
- பின்னூட்டங்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் உங்கள் தவறுகளை அறிந்துகொள்வதற்கும், சரி செய்வதற்கும் வாய்ப்பு கிடைக்காது. இதை ஒரு வாய்ப்பாக கருதி முன்னேறுங்கள்.
- உங்கள் தவறை தனியாக அழைத்து சுட்டிக்காட்டும் முதலாளி தான் சரியானவர். நான்கு பேர் முன்னிலையில் சீன போடும் ஆர்வக்கோளாறு போல உங்களிடம் சத்தம் போட்டால் அந்த இடத்தில நிற்காமல் நகர்ந்து விடுவது தான் உங்களுக்கு நல்லது. இது போன்று நடந்துகொள்ளும் முதலாளி நிச்சயம் உங்களை மனரீதியாக துன்புறுத்தும் நோக்கில் தான் அதை செய்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அந்த மாதிரி சைக்கோ மனிதர்கள் எல்லா இடத்திலும் உண்டு.சக மனிதனை மனிதனாக நடத்த தெரியாதவர்கள் மனிதனே அல்ல.
- சில சந்தர்ப்பங்களில், நாம் இலக்குகளை தாமதமாக முடிக்கலாம் அல்லது தாமதமாக முடிக்கும் சூழ்நிலை உருவாகலாம். இதை முன்னறிவிப்புடன் தங்கள் மேலாளரிடம் கூறுவது ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறை. ஒரு வேலையை செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை அறிந்து அந்த வேலையை செய்ய தொடங்குங்கள். சரியான நேரத்திற்கு முடிக்க முடியாமல் போனால் அவப்பெயர் வாங்க நேரிடும். கடைசி நாளில் கூறினால் முழு திட்டமிடலும் வீணாகிவிடும். இது ஒரு பாடமாக கற்றுக்கொண்டேன்.
- மிகவும் திறமை மிக்க அகங்காரிகளை விடத் திறமை குறைந்த, பணிந்து, மற்றவரோடு அனுசரித்துப் போகும் குணமுள்ளவரே மேலும் மேலும் பதவி உயர்வு பெறுவார். ஒரு துறையில் நிபுணராய் இருப்பவரை விட, பல துறைகளைப் பற்றியும் மேலோட்டமாக அறிந்து அடுத்தவரை நன்கு வேலை வாங்கத் தெரிந்தவரே கூடுதல் வெற்றி பெற்று மேலே போவார்.
- சில நேரங்களில், கொஞ்சமும் தகுதியில்லாதவர் உங்களுக்கு தலைவராக வரக்கூடும். அப்பொழுது ‘சகித்துக் கொண்டுதான்' ஆகவேண்டும். மேனேஜ்மெண்ட் முடிவுகளை ஒருபோதும் குறைத்து கூறக்கூடாது, அது ‘முட்டாள்தனமாக இருந்தாலும்'.
- திறமையான, தன்னம்பிக்கை மிகுந்த நிர்வாகிகள், திறமை மிக்க ஊழியர்களை ஊக்குவித்து வளர்ப்பார்கள்; அவை இல்லாத நிர்வாகிகள் தமக்கு மரியாதை தந்து எப்போதும் அனுசரித்துப் போகும், திறமை குறைந்த ஊழியரையே மேலே கொண்டுவருவார்கள். தமது ஊழியர் ஒருநாளும் தமது பதவிக்குப் போட்டியாளராகிவிடக்கூடாது என்பதில் விழிப்புடன் இருப்பார்கள்.
- பெண் ஊழியர்களிடம் பழகும்போது அதிகப்படி ஜாக்கிரதை அவசியம்; மிக அவசியம். இது #metoo காலம்.
- வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்பதை உலகம் கற்று தராது. நீங்கள் தான் சுயமாக கற்றுக் கொள்ள முடியும். இல்லை என்றால் அங்கு காட்பாதர் (godfather) ஒருத்தர் வேண்டும். தனி நபரின் முன்னேற்றம் என்பது அவரவர் உழைப்பு மற்றும் சுமார்ட்னஸ் (smartness)ஐ பொருத்தது.

Discussions.